கலைஞனை அச்சுறுத்த முடியாது நடிகர் சூர்யாவுக்கு எம்.பி ஜோதிமணி ஆதரவு

Movie Issue Support Jothimani MP Jai Bhim
By Thahir Nov 15, 2021 05:51 PM GMT
Report

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் தொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ஆதரவும் பெருகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கரூர் எம்.பி.ஜோதிமணி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் “ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம்.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி.

ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது.

அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது.அச்சுறுத்தவும் கூடாது.

ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது.

இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது. இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும்.

இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது. அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது.

சூர்யாவை அச்சுறுத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை படைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ள வெண்டும்.

நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை” என்று பதிவிட்டுள்ளார்.