சூர்யா அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம் - ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' பட சர்ச்சைகளை பூதாகரமாக வெடித்து வருகிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்நிலையில் 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக சூர்யா ரசிகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்திவிட்டதாக பிரச்சனைகள் எழுந்தது.
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது.
படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை.
அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம். சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம் சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
அதனால் எப்போதும் போல் நாம் பொறுமையாக இருப்பது தான் சிறப்பு. சூர்யா அண்ணன் எந்த சாதி, மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்.
சமூகம் பயன் பெற” என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
All India Suriya Fans club requests Actor @Suriya_offl fans not to respond to detractors of Suriya over #JaiBhim issue..#WeStandWithSuriya pic.twitter.com/3xDVmULzOx
— Ramesh Bala (@rameshlaus) November 15, 2021