'ஜெய் பீம்' படத்தால் மூன்று வேளை உணவு கிடைத்தது - கண் கலங்கும் இருளர் நடிகர்
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சூர்யாவின் 39வது படமான இந்தப்படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் 'ஜெய் பீம்' படத்தை தயாரித்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
இந்தப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சார்ந்த பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் பேசிய இருட்டப்பன் கதாபாத்திரத்தில் நடித்தவரிடம் இந்தப் படப்பிடிப்பு நடந்தபோது இந்த விஷயம் எனக்கு கிடைத்தது என்று நீங்கள் பெருமையாக கூறும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், நான் இரண்டு வேளை தான் சாப்பிடுவேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது மூன்று வேளை நல்லா சாப்பிட்டேன்.
அந்த அளவிற்கு எங்கள் புரொடெக்ஷன் தினமும் விதவிதமான சாப்பாடுகள் போட்டனர் என்று வெள்ளந்தியாக கூறியுள்ளார். இந்த காணொளி காட்சி பலரையும் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.