'ஜெய் பீம்' மீதான இந்த அன்பு அலாதியானது..எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - நடிகர் சூர்யா உருக்கம்

Movie Suriya Jai Bhim Thanks To Supporters
By Thahir Nov 17, 2021 04:52 PM GMT
Report

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வரவேற்பை பெற்றுள்ள அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது இந்தப்படம். 'ஜெய் பீம்' படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, படத்தில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற வாசகத்தை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் 'ஜெய் பீம்' படம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சூர்யாவை தாக்கியும் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், அன்பர்களே, 'ஜெய் பீம்' மீதான இந்த அன்பு அலாதியானது.

இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.