பணம் கட்டமுடியாதது மட்டும் தான் காரணம் - உயிரிழந்த ஜெகதீஷின் நண்பர் ஆதங்கம்
பணம் இல்லாத காரணத்தால் தான் ஜெகதீஷ் உயிரிழந்துள்ளார் என அவரின் நண்பர் ஃபயாஸ்தின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஜெகதீஸ்வரன் - செல்வசேகரன்
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நேற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாது ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனும் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வினால் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கூறி வருகின்றனர்.
அடுக்கடுக்கான கேள்வி
இதில் தற்போது உயிரிழந்த மாணவன் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அப்போது வருத்தத்துடன் பேசிய ஜெகதீசன் நண்பரான ஃபயாஸ்தின், தான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தபோதிலும், தன்னுடைய தந்தையால் வருடம் 25 லட்சம் கட்ட முடிந்த காரணத்தால் தான் தனியார் மருத்துவக்கல்லூரியில் தற்போது முதலாமாண்டு மருத்துவம் படித்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், பணத்தை வைத்து படிப்பவன், தேர்ச்சி பெற்று வந்தவுடன் மக்களுக்கு பணிபுரிய நினைப்பார்களா அல்லது போட்ட பணத்தை மீண்டும் எடுக்க நினைப்பார்களா? என கேள்வி எழுப்பிய அந்த மாணவன், இந்த நீட் தேர்வை வைத்து கொண்டு இன்னும் எத்தனை பேரின் உயிர்களை இந்த மத்திய அரசு பலி கொடுக்கப்போகிறது என்றும் வினவினார்.
மேலும், இந்த நீட் தேர்வினால் யாருக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பி, நீட் தேர்வு இல்லாத போது படித்து வெளிவந்தது மருத்துவர்கள் திறனற்றவர்களா என வினவினார். தொடர்ந்து CBSE பள்ளிகளில் படித்த தங்களுக்கே இந்த தேர்வு கடினமாக இருக்கும் நிலையில், இது அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு சவாலாக இருக்கும் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.