குழந்தைகள் மத்தியில் புதிய நோய் உருவாகி உள்ளது - துணை ஜனாதிபதி பேச்சால் வெடித்த சர்ச்சை
புதிய நோய்
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜக்தீப் தன்கர், "குழந்தைகள் மத்தியில் மற்றொரு புதிய நோய் வந்துள்ளது. அது என்னவென்றால், வெளிநாடு செல்வது. வெளிநாடு சென்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள்.
6 பில்லியன் டாலர்
எந்த நிறுவனத்துக்குப் போகிறோம், எந்த நாட்டுக்குப் போகிறோம் என்று எந்த மதிப்பீடும் இல்லை. 2024 ஆம் ஆண்டு மட்டும் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களின் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்தால், இந்தியாவில் படிக்கும்போது எவ்வளவு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மாணவர்கள் வெளிநாடு செல்வதால், அன்னிய செலாவணியில் 6 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை நமது கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக்கு செலவு செய்தால், நாம் எங்கு இருப்போம்? கல்வி வணிகமாக மாறுவது தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
வெளிநாட்டு நிலைமைகளைப் பற்றி மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும். இளைஞர்கள் பொதுவாக 8-10 வகையான வேலைகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் பல்வேறு துறைகளில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் பெரிதாகி வருகிறது. ஆனால் நமது பெரும்பாலான மாணவர்கள் அதை முழுமையாக பயன்படுத்துவதில்லை" என பேசினார்.
இந்திய கல்வி முறை
"பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர் சொல்வதைப் போல இது வியாதி எல்லாம் கிடையாது. இந்திய கல்வி முறை நோயால் பாதிக்கப்பட்டதன் அறிகுறியாகத்தான் பார்க்கிறோம்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்திருந்தார்.
The Honourable Vice President has lamented that going abroad has become a new disease for students.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 20, 2024
Actually, it is an old disease that has afflicted students for many decades. I too contracted this virus in 1975, but recovered in time to come back to India in 1980.
Students go… https://t.co/st0Y5Xh63P
ஜக்தீப் தன்கரின் மகள் அமெரிக்காவில் உள்ள பீவர் கல்லூரியில் (இப்போது ஆர்காடியா யுனிவர்ஸ்டி) பட்டம் பெற்றார் என்பதையும், அவர் இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கோடைகால படிப்புகளைக் மேற்கொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.