அரசியல் கட்சிகளுக்கு பணம்.. பிரபலங்களுடன் தொடர்பு - ஜாபர் சாதிக் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஜாபர் சாதிக் கைது
மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதற்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை போலீசார் தேடிவந்தனர். ஆனால் ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து, அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
மேலும், அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB - என்சிபி) இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் "ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.
பிரபலங்களுடன் தொடர்பு
சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர். போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார்.
இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.