சென்னை அணியில் இனி விளையாடமாட்டாரா ஜடேஜா - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜடேஜா அடுத்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடமாட்டார் என்று செய்திகள் பரவிய நிலையில் முற்றுப்புள்ளி வைத்தது அணி நிர்வாகம்.
இந்தாண்டின் 15 வது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது.இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தோனி அறிவித்தார்.
இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடரை துவங்கியது.
அடுத்தடுத்து படு தோல்விகளை சந்தித்தது சென்னை அணி.ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டது.ஜடேஜாவும் இந்த தொடரில் மிக மோசமாக விளையாடினார்.
இதனிடையே ஜடேஜா தனது வழங்கப்பட்ட கேப்டன் பதவியிலிருந்து விலகி கொண்டார். மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் பெரிதாக விளையாடாத ஜடேஜா, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.
மைக்கல் வான் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பயணம் நிறைவடைந்துவிட்டது, இனி சென்னை அணியில் ஜடேஜாவை பார்க்க முடியாது என்று பேசி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஓபனாக பேசியுள்ளார்.
“ சிஎஸ்கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளதாகவும், காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.