எனக்காக இதை பண்ணுங்க ப்ளீஸ்... தோனியிடம் கோரிக்கை விடுத்த ஜடேஜா
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் முன் தோனியிடம் ஜடேஜா தெரிவித்த விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன்களான சென்னை அணி விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இதனிடையே இந்த தொடர் தொடங்கும் முன் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனாலும் சென்னை அணி மோசமான வரலாற்றை ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே படைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் முன் தோனியிடம் தான் தெரிவித்த விஷயம் குறித்து ஜடேஜா பகிர்ந்துள்ளார். அதாவது உங்களது ஆலோசனை எனக்கு களத்தில் நிச்சயம் தேவை. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் கேப்டனாக இருக்க வேண்டும். மற்றபடி பரபரப்பு இல்லாத நேரத்தில் நான் கேப்டன் பொறுப்பை முழுமையாக பார்த்துக் கொள்கிறேன். உங்களிடமிருந்து இதனை இன்னும் நன்றாக கற்றுக்கொண்டு இரண்டாவது பாதியில் நான் தனியாக கேப்டன்சி செய்ய விரும்புகிறேன். அதுவரை எனக்கு உதவுங்கள். அப்போதுதான் என்னுடைய அழுத்தம் குறையும் என தெரிவித்துள்ளார்.
அதனால் தான் போட்டியின் கடைசி கட்டத்தில், பீல்டிங் வியூகம் செய்வது, பவுலர்களுக்கு ஓவர் கொடுப்பது போன்ற முடிவுகளை தோனி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.