அடுத்த சிஎஸ்கே கேப்டன் நான் தான் - ட்வீட்டால் மாட்டிக்கொண்ட ஜடேஜா

msdhoni chennaisuperkings ravindrajadeja
By Petchi Avudaiappan Sep 15, 2021 06:25 PM GMT
Report

 சென்னை அணியின் அடுத்த கேப்டன் தொடர்பாக அந்த அணி வீரர் ஜடேஜா பதிவிட்ட ட்வீட் ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் அசைக்க முடியாத அணியாக திகழும் சென்னை அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய அணி கேப்டனான எம்.எஸ்.தோனி 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் யார் என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இதில் ஜடேஜாவின் பெயர் அடிபட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட போது, தோனியின் அதிரடியை காண முடியாததால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அணி வீரர் ஜடேஜாவிடம் ட்விட்டரில் அவரிடம் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக இருக்க யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அவர், ‘8' என ரிப்ளை செய்திருந்தார்.

எட்டாம் எண்ணானது சென்னை அணியில் ஜடேஜா அணிந்திருக்கும் ஜெர்ஸியின் நம்பராகும். எனவே ஜடேஜா தான் அடுத்த கேப்டனாக இருக்க ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிறிது நேரத்திலேயே ஜடேஜா அந்த ட்வீட்டை நீக்கி விட ரசிகர்கள் அவரின் பதிவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.