வெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ipl2021 Tripathi MIvsKKR PL2O21
By Irumporai Sep 23, 2021 06:00 PM GMT
Report

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இடம்பெற்றார்.

அந்த அணியின் டி காக் உடன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ரோகித் சர்மா 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 9.2. ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே அடித்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சார்பில் பெர்குசன், பிரசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதன்பின், 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

வெங்கடேஷ் அய்யர் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார். தொடர்ந்து அவர் ருத்ரதாண்டவம் ஆடினார். விக்கெட் வீழ்த்திய பும்ரா டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா ஒரு சிக்ஸ் விளாசினர். 2-வது ஓவரை ஆடம் மில்னே வீசினார்.

இந்த ஓவரில் வெங்கடேஷ் அய்யர் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் கொல்கத்தா அணிக்கு 2 ஓவரில் 30 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரிலும் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஆனால் கடைசி பந்தில் ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார்.

அவர் 9 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். அடுத்து வெங்கடேஷ் அய்யர் உடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பவர்பிளேயான 6 ஓவரில் 63 ரன்கள் குவித்தது.

10 ஓவரில் 111 ரன்கள் விளாசியது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 25 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் திரிபாதி 29 பந்தில் அரைசதம் அடித்தார். வெங்கடேஷ் அய்யர் 53 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மார்கன் 7 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது