ஸ்டாலின் சொன்னால் விஜய்க்கு ஆதரவு - தவெக ஆட்சிக்கு வருவதில் நீடிக்கும் சிக்கல்
ஸ்டாலின் சொன்னால் விஜய்க்கு ஆதரவு தருவோம் என முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்னும் நிலையில், 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி, 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்க திட்டமிட்டு, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராயை சந்தித்து உரிமை கோரினர்.
ஆனால், இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவை என்னும் நிலையில், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் மறுத்து விட்டார்.
ஏற்கனவே விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தவெக சார்பில் ஆதரவு கோரி கடிதம் எழுதப்பட்டது.
தற்போது ஆளுநர் அழைக்க மறுப்பதால் பதவியேற்புக்கு தாமதமாகும் நிலையில், தவெக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கேட்டனர்.
Z130C4
தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்கு சென்று ஆதரவு கேட்டார். நாளை செயற்குழுவை கூட்டி விவாதித்து முடிவெடுத்து தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிடிஆர் நிர்மல் குமார், ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சொன்னால் தவெகவிற்கு ஆதரவு
இதனையடுத்து, தவெக எம்எல்ஏக்கள் அருண்ராஜ் மற்றும் முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதரவு கேட்டனர்.
இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், "நாங்கள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம். எங்களிடம் தவெக தரப்பில் இருந்து ஆதரவு கேட்டுள்ளார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுக்க சொன்னால் ஆதரவு கொடுப்போம். கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் ஆதரவு தர மாட்டோம். அவர் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்போம்" என தெரிவித்துள்ளார்.
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் தலா 2 எம்எல்ஏக்களை வைத்துள்ளது.
இதனிடையே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்கள்! உரிமையாளர்களுக்கு வெளியாகிய முக்கிய அறிவிப்பு IBC Tamil
நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை! Manithan