60 வருட திமுக கூட்டணி முறிந்தது - தவெக கூட்டணியில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தவெக கூட்டணியில் இணைந்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகிய IUML
சுமார் 60 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML), 2026 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆதரவை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, தவெக அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஏ.எம்.ஷாஜஹான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பெயர் சூட்டப்படாத தவெக கூட்டணியில் தொடர்வதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பெயர் சூட்டப்படாத தவெக கூட்டணியில் தொடர்கிறோம்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சி நாளையும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
அதனால் உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல், சட்டசபை தேர்தல், மக்களவைத் தேர்தல் என அனைத்திலும் இந்த ஆட்சி தொடருவதற்கு தவெகவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்" என தெரிவித்துள்ளார்.