கல்லூரி மாணவிகளுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
தமிழக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1,000 அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே சட்டசபை தொடங்கி பட்ஜெட் மீதான விவாதங்கள் 4வது நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , தமிழகத்தில் வருமானப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடன் மளமளவென உயர்ந்துவிட்டது என கூறினார்.
மேலும் தமிழக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.