தமிழகத்தை தாக்க போகும் மாண்டஸ் புயல்? - மெரினாவில் தொடரும் பதற்றம்
மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்
இது மகாபலிபுரம் அருகே கரையை கடக்க கூடும் என்பதால் அப்பகுதியில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிமீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
கடற்கரையில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் போலீசார்
மேலும் சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், கோவளம், காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் என்பது அதிகரித்துள்ளது. கரையை தாண்டி அலைகள் எழும்புவதால் போலீசார் விசில் அடித்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அலையில் இறங்க கூடாது என கூறி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் கடலோர காவல் படை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை தாக்க வாய்ப்பிருக்கும் என்று அஞ்சப்படுவதால் பேரிடர் மீட்பு படையினர் 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.