துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஐ.டி.ரெய்டு
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் குறிப்பாக, அரசியலில் உள்ள முக்கிய தலைவர்கள் அவரது உறவினர் மற்றும் நண்பர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் உள்ளிட்டோரது வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
வருமான வரித்துறையினரின் சோதனைக்கு மத்திய அரசு தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே போல், அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராடசி மன்ற தலைவர் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.