வீட்டின் அடியில், சுவற்றில் பணம் நகைகளை பதுக்கி வைத்த பிரபல தொழிலதிபர்
மஹாராஷ்டிராவில் கட்டுக்கட்டாக சுவர்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்த மகாராஷ்டிர ஜிஸ்எடி அமைப்பினருக்கு, அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சந்தேகம் ஏற்பட்டது. அதாவது தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.22.83 லட்சம் லாபம் எடுத்து இருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2020-21 நிதியாண்டில் அவரது லாபம் ரூ.652 கோடியாக திடீரென அதிகரித்து உள்ளது.
இதேபோல அடுத்த நிதியாண்டான 2021-22 இல் அவரது மொத்த வருவாய் வியக்கத்தக்க வகையில் ரூ.1764 கோடியை எட்டியது. இது மஹாராஷ்டிரா ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மஹாராஷ்டிரா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் சாமுண்டா புல்லியனின் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.அப்போது சோதனை நடத்தப்பட்ட ஒரு இடத்தில் போலீசார் நிலம் மற்றும் தரையில் மறைத்து வைக்கப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்தனர்.
அந்த குறிப்பிட்ட இடத்தின் தரை மற்றும் சுவர்களின் ஒறு பகுதி சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது. இதையடுத்து அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் இடித்துள்ளனர். அப்போது அங்கு ரூ.9.78 கோடி ரொக்கமும், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளி செங்கற்கள் இருப்பதைக் கண்டு அதிகாரிகளே மிரண்டு போய்விட்டனர்.
இதையடுத்து அந்த வீட்டைச் சீல் வைத்த மாநில ஜிஎஸ்டி துறையினர், இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறைக்கு அனுப்பினர். அங்குக் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க மட்டும் சுமார் 6 மணி நேரம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் கைதை தவிர்க்கத் தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் மும்பை செஷன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால், முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள் தொழிலதிபர் சாமுண்டா புல்லியனை விசாரணைக்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டார். இத்தனை கோடி ரூபாய் பணம் சாமுண்டா புல்லியனுக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.