வீட்டுக்கு வந்த ஐடி அதிகாரிகள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனாங்க - மு.க.ஸ்டாலின்
எனது மகள் வீட்டிற்கு சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். வரும் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் பிரச்சார களத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் கொளுத்தும் வெயில் கூட பார்க்காமல் கடுமையாக பரப்புரை ஆற்றி வருகிறார்கள். இதனையடுத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயநிதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது - “எனது மகள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் காலை முதல் இரவு வரை எங்கள் வீட்டில் டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிட்டு, பின்பு வெறும் கையோடு திரும்பி சென்றார்கள்.

அவர்கள் போகும்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக 25 சீட் கிடைக்கப்போகிறது என்று கூறிவிட்டுதான் சென்றார்கள். திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு நடந்துள்ளது. திமுகவை அச்சுறுத்தவே ஒருநாளும் முடியவே முடியாது. அதிமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பாஜக மோடியின் மஸ்தான் வேலை திமுகவிடம் செல்லாது.
திமுக வெற்றியை தடுக்கவே அனைத்து பத்திரிகைகளிலும் அதிமுக விளம்பரம் செய்து வருகிறது. மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். ஆனால், அதை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பேசினார்.