செல்போன் பயன்பாட்டை குறைப்பது நல்லது : காவலர்களுக்கு அறிவுரை
செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கான யோகா பயிற்சி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா பயிற்சி முடிந்ததும் தலைமையேற்று நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரையாற்றும்போது, "காக்கிச்சட்டை அணியும்போதே நிதானமும் சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். பிரச்னைக்காக செல்லுமிடத்தில் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த செயலிலும் இறங்கக்கூடாது.

பணிக்கு செல்லும் இடத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அருகில் என்ன நடந்தாலும் அதனை கவனிக்கும் எண்ணம் இருப்பதில்லை.
செல்போன் பயன்பாட்டை நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் கெடுதல். நீங்கள் பார்க்கும் பதவிக்கும் கெடுதல். செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது. வேலை மீதான ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளுங்கள் என கூறினார்.