இஸ்ரோவின் டாக்கிங் திட்டம் வெற்றி - வரலாற்று சாதனை படைத்த இந்தியா
ஸ்பேஸ் டாக்கிங் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வு தொடர்பான சோதனைகளில் பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது.
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு தனி விண்வெளி மையம், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்ற பல்வேறு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.
ஸ்பேஸ் டாக்கிங்
விண்வெளி மையம் உருவாக்குவதற்கு ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம். விண்வெளியில் இரு செயற்கைகோள்களை ஒன்றிணைப்பதே ஸ்பேஸ் டாக்கிங் ஆகும்.
இதற்காக கடந்த 2024 டிசம்பர் 30 ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட, எஸ்டிஎக்ஸ் 01- சேஸர், எஸ்டிஎக்ஸ் 02- டார்கெட் என்ற இரு ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
1.5 கிலோமீட்டர் இடைவெளியில் இருந்த செயற்கைக்கோள்கள் படிப்படியாக 50 மீட்டர், 15 மீட்டர் என அதன் தொலைவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(16.01.2025) காலை இரு செயற்கைகோள்களையும் இணைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து 4வது நாடாக இந்தியாவின் இஸ்ரோ இந்த சாதனையை படைத்துள்ளது.