'நான் ISRO தலைவராவதை கே.சிவன் தடுத்தார்' - சோம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு!

India Indian Space Research Organisation ISRO
By Jiyath Nov 05, 2023 03:24 AM GMT
Report

தான் இஸ்ரோ தலைவராக பதவி உயர்வு பெறுவதை முன்னாள் தலைவர் கே.சிவன் தடுக்க முயன்றதாக தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சோம்நாத்தின் சுயசரிதை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) தற்போதைய தலைவராக இருப்பவர் சோம்நாத். இவர் கேரளா மாநிலம் சேர்த்தலாவை சேர்ந்தவர். சோம்நாத்தின் தற்போதைய பதவி காலத்தில் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்தது.

விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆனால் இதற்கு முன் இஸ்ரோ தலைவராக இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த கே சிவன். இவரின் பதவிக்காலத்தில் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும்போது நிலவின் மேற்பரப்பில் மோதி சிதறியது. இதனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் 'நிலவு குடிச்ச சிங்கங்கள்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் முன்னாள் தலைவர் சிவன் குறித்து குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சோம்நாத் கூறியிருப்பதாவது "எனக்கும் சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்தவுடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ்.கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு எங்கள் இருவரின் பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் பதவி எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்த நிலையில் அந்த பதவி சிவனுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோ தலைவரான பிறகு சிவன், அதற்கு முன்பு வகித்து வந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை.

சிவன் மீது குற்றச்சாட்டு

விக்ரம் சாராபாய் பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். அந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி.என். சுரேஷின் தலையீட்டை அடுத்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன்.

இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக சிவன் தனது பதவியை நீட்டிக்கவே முயன்றார். என்னை தலைவராக்கக் கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன். இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க என்னை அழைத்துச் செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர்" என பல்வேறு பரபரப்பு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. சோம்நாத்தின் சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குநர் கே.சிவன் குறித்த இந்த விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புத்தகத்தை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது "நான் இன்னும் எனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவில்லை. புத்தக வெளியீட்டாளர்கள் இந்த புத்தகத்தின் சில காப்பிகளை வெளியிட்டு இருக்கலாம் என கருதுகிறேன். புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்தி வைக்குமாறு நான் கூறியுள்ளேன். இந்த புத்தகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து பிறகு முடிவு செய்வேன். இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் புத்தகத்தை எழுதினேனே தவிர யாரையும் டார்கெட் செய்து எழுதவில்லை. கே.சிவனை இது மிகவும் காயப்படுத்தி இருக்கும் என்பது எனது வருத்தம் அளிக்கிறது. ஒரு தலைவராக அவர் முன் பல விருப்பங்கள் இருந்து இருக்கும். அவரது அதிகாரத்தை நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. எனது வருத்தம் குறித்த கேள்வியை மட்டுமே இருந்ததே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.