கால் வைத்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை- செண்டினல் தீவு சொல்லும் மர்ம கதை!
பூமியில் நாகரீக உலகோடு தொடர்பில்லாமல் வாழும் பழங்குடி மக்களில் வடக்கு சென்டினல் குழுவும் ஒன்று. இந்த தொடர்பின்மைக்கு புவியியல் காரணங்களும் உண்டு. இந்த சிறிய தீவு முக்கியமான கப்பல் வழித்தடங்களுக்கு அப்பால் உள்ளது. மேலும் ஆழமற்ற பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய அரசு இந்தத் தீவினை பாதுகாப்பு பிரதேசமாக வரையறுத்திருக்கிறது. இதன் மூலம் இந்த மக்களின் தனித்துவம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் கடந்த 200 ஆண்டுகளில் இத்தீவிற்கு வெளியாட்கள் சென்றிருந்தாலும், சந்திப்பு மோசமாகவே இருந்தது.
சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவர் 2018 இல் மரணமடைந்தார். இந்த மரணம் இந்தச் சிறிய தீவில் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் மீது உலகின் கவனத்தை ஈர்த்தது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படியும், இந்த தீவில் எத்தனை பேர் வாழ முடியுமென்ற மானுடவியலாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையிலும், வடக்கு சென்டினல் தீவில் 80 முதல் 150 பேர் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதே நேரம் இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 500 முதல் குறைந்த பட்சமாக 15 வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து வடக்கு சென்டினல் தீவு சட்டப்பூர்வமாக ஒரு குழப்ப நிலையிலிருந்தது. 1970 இல், தனிமைப்படுத்தப்பட்ட இந்த சிறிய தீவுக்கு இந்தியா உரிமை கோரியது.
மேலும் ஒரு கணக்கெடுப்பு கல் பலகையைக் கடற்கரையில் பதித்தது. இதற்கு சென்டினலிஸ் மக்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
வெளியுலக வருகைகள் 1981 வரை அவ்வப்போது இருந்தன. 1974 இல் ஒரு நேஷனல் ஜியோகிராஃபிக் படக் குழுவினர் தீவுக்கு அருகே சென்ற நிலையில் குழுவின் இயக்குநர் தொடையில் சென்டினலிஸ்டுகளால் ஏவப்பட்ட அம்பு ஒன்று பாய்ந்தது.
2006 இல், ஒரு இந்தியப் படகு கரையோரம் சென்றது. மேலும் சென்டினலீஸ் மக்கள் படகில் வந்த மீனவர்கள் இருவரையும் கொன்று அவர்களின் எச்சங்களைப் புதைத்தனர்.
இவ்வாறு அங்கு செல்ல முற்பட்டவர்கள் தோல்வியையே தழுவினர்.
இந்த தீவில் அடியெடுத்து வைத்து உயிருடன் திரும்பியவர்கள் மிகக் குறைவு என்றே அறியப்படுகிறது.