குட்டி சொர்க்கமாய் ஜொலிக்கும் தீவு! அசரவைக்கும் புகைப்படங்கள்
ஏரி ஒன்றின் நடுவிலிருக்கும் அந்த தீவைப் பார்த்தால் குட்டி சொர்க்கம் போல் இருக்கிறது. ஜேர்மனியின் Steinhude என்ற ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் Wilhelmstein என்ற அந்த சிறிய தீவின் புகைப்படத்தைப் பார்க்கும் யாரும் அந்த தீவுக்கு நிச்சயம் சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.
தங்கும் வசதியுடனான ஒரு ஹோட்டல், ஒரு கோட்டைக்குள் அமைந்திருக்கும் அருங்காட்சியகம், சுற்றிலும் தண்ணீர் என அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். இன்று சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த தீவின் வரலாற்றைப் பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாக இருக்கும். ஆம், முன்பு இத்தீவு ஒரு இராணுவ தளமாக இருந்துள்ளது. அத்துடன், இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு ஆகும்.
ஏரியின் நடுவே கற்கள் மீது கட்டப்பட்டுள்ள இந்த செயற்கை தீவை உருவாக்க ஐந்து ஆண்டுகள் ஆனதாம். மேலிருந்து பார்த்தால் நட்சத்திர வடிவில் காணப்படும் கோட்டை ஒன்றும், இராணுவ பயிற்சிப் பள்ளி ஒன்றும் முன்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளன. 1772ஆம் ஆண்டு, ஜேர்மனியின் முதல் நீர் மூழ்கிக்கப்பல் இந்த தீவில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தீவின் விந்தைகளில் ஒன்று என்னவென்றால், நடந்தே அந்த தீவை சென்றடையலாம் என்பதாகும். தண்ணீர் சூழ்ந்திருக்கும் ஒரு தீவுக்கு எப்படி நடந்தே செல்வது என யோசிக்கிறீர்களா? குளிர்காலத்தில், இந்த ஏரியின் தண்ணீர் உறைந்து கல் போலாகிவிடும், அப்போது மக்கள் நடந்தே இந்த தீவை அடைவார்கள். மற்றபடி, தினமும் இங்கு வந்து செல்ல படகுப்போக்குவரத்து வசதி உள்ளது.