அடுத்தடுத்து வேறு மதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்த மகன் - விரக்தியில் இஸ்லாமிய பெற்றோர்கள் தற்கொலை!
காஞ்சிபுரம் அருகே இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் அடுத்தடுத்து வேறு மதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதால் வேதனையில் இஸ்லாமிய பெற்றோர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த முகமது ஜலீல் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அரசு மன நல அலுவலராக பணிபுரிந்து 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவர் அவரது மனைவி மெகருனிஷா மற்றும் மாற்றுத்திறனாளி மகன் ஆசிக் மீரான் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இவரது மகன் கடந்த 2014 ஆம் ஆண்டு அயனாவரம் பகுதியை சேர்ந்த இந்துமதத்தை சேர்ந்த சந்தியா தேவி என்ற பெண்ணை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாததால் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சந்தியா தேவி விவாகாரத்து பெற்று சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த முகமது ஜலீல் குடும்ப கௌரவம் காரணமாக, காஞ்சிபுரத்தில் குடியேறினர். இதனை தொடர்ந்து அவரது மகன் ஆசீக் மீரான் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அங்கு அவரது கிறிஸ்துவ நண்பனின் சகோதரியை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே அந்த கிறிஸ்தவ பெண்ணிற்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசீக் மீரான் அவரது பெற்றோரிடம் உறுதியாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆசீக்கின் மனதை மாற்ற முயற்சி செய்துள்ளனர். எதற்கும் மசியாத மகன், அவரை கரம் பிடித்தே ஆவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பெற்றோர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.