தீபக் சாஹருக்கு பதில் சென்னை அணியில் பிரபல இந்திய வீரர் - என்ன காரணம் தெரியுமா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் சென்னை அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. இதற்கு காரணம் சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதே ஆகும். சென்னை அணியில் ரூ.14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே தீபக் சாஹர் இல்லாமல் விழி பிதுங்கி நிற்கும் சென்னை அணிக்கு, அவரது விலகல் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணி மீதமுள்ள 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் சூப்பரான மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் யாரும் எதிர்பாராதவிதமாக இந்திய அணியின் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவை குறிவைத்துள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் கண்டுக்கொள்ளாத இஷாந்த் சர்மாவை ஏன் சென்னை வாங்க நினைக்கிறது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இதற்கு காரணம் தற்போது போட்டி நடைபெறும் மும்பை மற்றும் புனே களங்களில் வேகப்பந்துவீச்சு முக்கிய பங்காக உள்ளது. அதுவும் ஷமி, உமேஷ் யாதவ் போன்ற டெஸ்ட் பவுலர்கள் தான் சோபித்து வருகின்றனர். இதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் கொண்ட இஷாந்த் ஷர்மாவை சென்னை அணி வாங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.