நடிகருக்காக படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர் : விஜய் பட நடிகை பரபரப்பு புகார்
பட வாய்ப்புக்காக கதாநாயகன் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை இஷா கோபிகர் புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழில் அரவிந்த் சாமி நடித்த என் சுவாசக் காற்றே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இஷா கோபிகர், விஜய் நடித்த நெஞ்சினிலே, விஜயகாந்த் நடித்த நரசிம்மா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இஷா கோபிகர் பட வாய்ப்பிற்காகப் பிரபல நடிகர் தன்னை ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த போது அந்த படத்தின் கதாநாயகன் தனியாக வரும்படி அழைத்தார். படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுக்கு உங்களை பிடித்துள்ளது. உதவியாளர்கள் யாரும் இல்லாமல் தனியாக சென்று அவரை சந்தியுங்கள் என்று கூறிய போது அந்த நடிகரின் நோக்கம் புரிந்தது.
நான் எனது அழகு திறமையை வைத்துக் கொண்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். அதை அடமானம் வைத்துவிட்டு நடிகருடன் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கோபத்துடன் கூறினேன். உடனே என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர். மேலும் திரைத்துறையிலிருந்து எனக்கு வரும் வாய்ப்புகளையும் கெடுத்ததால் சினிமாவில் எனது வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இஷா கோபிகரின் இந்த குற்றச்சாட்டால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.