#காடு_எங்கடா_ஜக்கி - ட்விட்டரில் ஜக்கி வாசுதேவை கலங்கடிக்கும் காட்டு உயிரினங்கள்
ட்விட்டர் வலைதளம் அக்கப்போருக்கு பஞ்சமில்லாத சமூக ஊடகம். அதிலும் குறிப்பாக தமிழ் ட்விட்டர் நக்கலுக்கும், நையாண்டிக்கும் பஞ்சமில்லாதது.
கடந்த 2019-ம் ஆண்டு தற்செயலாக நிகழ்ந்த நேசமணியை ட்ரெண்டை உலக அளவில் ட்ரெண்ட் செய்ய வைத்தது தமிழ் ட்விட்டர்.
இது எதர்ச்சையாக நடந்ததாக இருந்தாலும் அன்றைய தினம் தான் பிரதமர் மோடியும் இரண்டாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் பதவியேற்பை பின்னுக்குத் தள்ளி தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நேசமணி ட்ரெண்ட் ஆனார்.
அதே போல் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும்போது #gobackmodi ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் ஆகிவிட்டது. ட்விட்டரில் #gobackmod ட்ரெண்டானால் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் என மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்கிற அளவுக்கு அந்த ஹேஷ்டேக் நமக்கு பழக்கமாகிவிட்டது. நேருவுக்கே கருப்பு கொடி காட்டிய மாநிலம் அல்லவா தமிழ்நாடு.
அந்த வகையில் தமிழ் ட்விட்டரின் சமீபத்திய ஸ்பெஷல் #ஒன்றியஉயிரினங்கள் ஹேஷ்டேக். தமிழகம் என்பதை தமிழ்நாடு என அழைக்கவும் ரிப்பன் மாளிகையில் மீண்டும் தமிழ் வளர்க என்கிற பெயர்ப்பலகை மீண்டும் வைக்கப்பட்டதும் தமிழ் பற்றிய பெருமைகள் மீண்டும் ட்ரெண்ட் ஆனது.

இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ‘டைனோசர் கூட தமிழில் தான் பேசியது எனச் சொல்வார்கள் போல’ என ட்வீட் செய்திருந்தார். கண்டெண்ட் கிடைத்தால் சாதாரணமாக விடுவார்கள் தமிழ் நெட்டின்சன்கள்.. டைனோசரின் பெயரிலே ட்விட்டர் கணக்கு தொடங்கி அர்ஜுன் சம்பத் ட்வீட்டுக்கு பதிலளிக்க வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து #ஒன்றியஉயிரினங்கள் என்கிற ஹேஷ்டேக் கீழ் பல காட்டு உயிரினங்களின் பெயர்களிலும் ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு நகைச்சுவையாக பதிவிடத் தொடங்கின.
இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வனநிலங்களை ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இந்த செய்தியைப் பார்த்த #ஒன்றியஉயிரினங்கள் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேஷனை குறிவைத்து #காடு_எங்கடா_ஜக்கி என்கிற ஹேஷ்டேக்கின் ட்வீட் செய்யத் தொடங்கி மீம் மழை பொழிந்தன.
இந்திய அளவில் தற்போது #காடு_எங்கடா_ஜக்கி என்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.