திருச்செந்தூர் கோவிலுக்குள் விதிகளை மீறி நுழைந்தாரா? - விஜய்க்கு எதிராக புதிய சர்ச்சை
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்றைய தினம் சாமி தரிசனம் செய்தத விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், எதிர்வரும் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 27-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விஸ்பரூப தரிசனத்தில் ஈடுபட்டார்.
இதன்போது விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது.அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று விஜய் கால்களை கழுவி வழிபட்டார்.
இந்நிலையில் இந்து அல்லாத (கிறிஸ்தவரான) விஜய் கோவிலுக்குள் சென்றதன் மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி உள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
விஜய் நேற்று விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆனால் வேறு மதத்தை சார்ந்த ஒருவர் தெய்வத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மற்றும் இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் விஜய் வேறு மதத்தினர் எனபதால் அவர் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு கொடுத்ததாக குறித்த சர்ச்சைக்கு தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.