இலங்கையில் விடுதலைபுலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? - பாதுகாப்பு அதிகரிப்பு..!
வருகிற 18-ந் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால்,இலங்கையில் ராணுவம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும்,இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை,இந்திய உளவு அமைப்பு கூறியதாக பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் பல நாட்டு தொடர்புடைய புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களிரல் சிலர்,தற்போதைய இலங்கை கலவரத்தில் தங்களது இருப்பை உணர்த்த முயன்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மே 18-ந் தேதி முன்னாள் விடுதலைப்புலிகள் இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,விடுதலைப்புலிகள் முக்கிய தலைவர்கள் படுகொலைக்கு பழிவாங்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி இலங்கை இராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இந்திய உளவு அமைப்புகளிடம் அந்த செய்தி குறித்து கேட்டோம். அதற்கு பொதுவான தகவலாக அதை வெளியிட்டு இருப்பதாகவும், மேல்விசாரணை நடத்தி இலங்கையிடம் தகவல் தெரிவிப்பதாகவும் இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன.
இருப்பினும், இந்த தாக்குதல் செய்தியும், தேச பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த அனைத்து உளவு தகவல்களும் உரிய முறையில் விசாரிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.