எஸ்பி வேலுமணியை கைது செய்ய தீவிரம்? முதல்வரிடம் கோரிக்கை வைத்த ஓபிஎஸ்- நடந்தது என்ன?
அதிமுக ஆட்சியில் இருந்த போது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நேற்று ரெய்டு நடந்தது.
கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணி வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய 60 இடங்களில் போலீசார் தீவிர ரெய்டு நடத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் இருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிந்து நேற்று மாலையே வேலுமணியை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டியதாகவும் தகவல்கள் கசிந்தன.
அவரை கைது செய்தால் எங்கே கொண்டு செல்லலாம் என்றெல்லாம், அதிகாரிகள் யோசித்து வந்த நிலையில், இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் பேசியிருக்கிறார்.
கைது செய்ய வேண்டாம் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதன் பேரில், அந்நடவடிக்கை கைவிடப்பட்டதாம்.
இருப்பினும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.