பதுங்க கூடியவரா பிரபாகரன்? - சந்தேகத்தை கிளப்பும் சீமான்
போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்துவிட்டப்பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் பிரபாகரன் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன் நேற்று கூறினார். தமிழ்நாட்டில் பிரபாகரனைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருப்பவர் சீமான். அவர் இது பற்றி என்ன சொல்கிறார் என்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் சில கேள்விகள் மட்டும் இருக்கின்றன.

என் தம்பி பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் மட்டுமே தப்பிச் சென்றிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்துவிட்டப்பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இரண்டாவது சொல்லிவிட்டு வருபவர் அல்ல அவர். வந்துவிட்டு சொல்பவர்.
அதுதான் அவருக்கு பழக்கம். அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள் சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அவர்.
பெரியாரிடம் கடவுள் இல்லை என்கிறீர்களே உங்கள் முன் கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர். அன்று முதல் கடவுள் இருக்கிறார் என சொல்வேன் என்றார் பெரியார். அதேபோலத்தான் பழ.நெடுமாறன் சொல்வதைப் போல பிரபாகரன் நேரில் வந்துவிட்டால் அப்போது அதைப் பற்றி பேசலாம்" என்று சீமான் கூறினார்.