ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி செய்த தவறு ... ஜடேஜா பாவம் என கூறிய முன்னாள் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா விஷயத்தில் எடுத்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் சென்னை அணி கேப்டனாக தோனி மீண்டும் களமிறங்கினார். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேவை என்ற சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே கடந்த வருடமே ஜடேஜாவுக்கு கேப்டன்சி குறித்து தெரியும். அதற்காக தயாராக நிறைய காலம் இருந்த நிலையில் அவரால் ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன்சியை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவரின் பணியை மற்றவரால் செய்ய முடியாது. எனவே தான் மீண்டும் கேப்டன் பதவி தன்னிடம் வந்தது. இதில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என தோனி வி்ளக்கமளித்தார்.
இந்நிலையில் தோனியின் கருத்துக்கு முன்னாள் சென்னை அணி வீரர் இர்ஃபான் பதான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்தாண்டே ஜடேஜாவுக்கு கேப்டன்சி பற்றி தெரிவித்திருந்தால் மெகா ஏலத்தின் போது அவரின் முடிவுகள் தான் இருந்திருக்க வேண்டும். அவருக்கு ஏற்றார் போல தான் அணியின் கட்டமைப்பு இருந்திருக்க வேண்டுமே என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் ஜடேஜா தோனியை விட அதிக தொகை கொடுத்து தக்கவைக்கப்பட்டார். அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் ஏன் சென்னை அணி நிலையான ஒரு முடிவில் இல்லை என்பது தான் இங்கு பிரச்சினையாக உள்ளது.
நடப்பு தொடரில் ருத்துராஜ் கெயிக்வாட் கூடதான் பலமுறை சொதப்பினார். ஆனால் அவருக்கு இன்னும் நிர்வாகம் வாய்ப்பு தருகிறது. அப்படி இருக்கையில் ஜடேஜா விஷயத்தில் இவ்வளவு அவசரம் ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு கேப்டன்சி அனுபவம் இதுவே முதல் முறை.எனவே அவருக்கே வாய்ப்பு தர வேண்டும் என இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.