உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று!

birthday irattaimalai srinivasan
By Anupriyamkumaresan Jul 07, 2021 11:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கட்டுரை
Report

அயோத்திதாச பண்டிதர், எம்.சி ராஜா, அம்பேத்கர் என பட்டியலின மக்கள் விடுதலையை முழு மூச்சாகவும், பெருங்கனவாகவும் கொண்டிருந்த பல தலைவர்கள் இருந்தார்கள்.

இவர்களுக்கு முன்னோடியாக தனது 85 வயது வரையிலும், பட்டியலின மக்களின் குரலாய் ஒலித்து பயணித்தவர், இரட்டைமலை சீனிவாசன். இன்று அவரது 162-வது பிறந்த தினம்.

உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! | Irattai Malai Srinivasan Birthday Article

‘கற்பி… ஒன்று சேர்… புரட்சி செய்’ என்பதே இந்திய அரசியல் சாசனத்தின் அம்பேத்கரின் மாபெரும் முழுக்கம். சாதியின் பெயரில் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல், இன்று பொது சமூகத்தாலும் அறிவார்ந்த தலைவராக கொண்டாடப்படும் அம்பேத்கர் மகாராஷ்டிராவில் 1891-ஆம் ஆண்டு பிறந்தார்.

அவர் பிறந்த அதே ஆண்டில் தமிழகத்தில் பட்டியலின மக்கள் உரிமைகளுக்காகவும் கல்வி அதிகாரத்திற்காகவும் ‘பறையர் மகாஜன சபை’யை ஏற்படுத்தி போராடிக் கொண்டிருந்தவர் இரட்டைமலை சீனிவாசன்.

உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! | Irattai Malai Srinivasan Birthday Article

பட்டியலின மக்கள் உரிமை விவகாரத்தில் வட இந்தியாவை காட்டிலும் தமிழ்நாடு சமூக நீதி விஷயத்தில் எவ்வளவு முன்னோக்கி இருந்தது என்பதற்கு இரட்டைமலை சீனிவாசன் ஏற்படுத்திய 'பறையர் மகாஜன சபை'யும் முக்கியச் சான்று. நீதிக்கட்சி தமிழகத்தில் 1916-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி வந்தபிறகுதான் பட்டியலின மக்கள், கல்வி கற்க முடிந்தது. உரிமைகளைப் பெற முடிந்தது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோம்: பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்; அவர்களுக்காக போராட அமைப்பு மட்டுமல்ல, பத்திரிகையையே கொண்டு வந்திருக்கிறோம் என்று பெருமையோடு சொல்ல தமிழக வரலாற்றின் ஆவண சாட்சியாய் விளங்கிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் இரட்டைமலை சீனிவாசன்.

பழைய செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் ஜூலை 7-ம் தேதி 1859 ஆம் ஆண்டு பெரும் செல்வந்தரான இரட்டைமலை – ஆதியம்மை தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் உயர்ந்திருந்தாலும் எங்களைவிட நீ கீழானவர்தான் என்று ஒடுக்குதலுக்கு ஆளானபோது தஞ்சைக்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம். ஆனால், அங்கும் நிலவுடமையாளர்களால் ஒடுக்கப்பட்டதால் கோவைக்கு குடிபெயர்ந்தனர்.

உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! | Irattai Malai Srinivasan Birthday Article

எங்கு குடிபெயந்தாலும் தனது கல்வி கற்கும் ஆர்வத்தை யாராலும் ஒடுக்கிவிட முடியாது என்பதில் தீவிரமாக இருந்த இரட்டைமலை சீனிவாசன் தஞ்சை மற்றும் கோவையில் பள்ளிப்படிப்பை, முடித்து கோவை அரசினர் கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் பயின்ற 400 பேரில் கிட்டத்தட்ட 390 பேர் பிராமணராக இருக்க, பத்து பேர் மட்டுமே வேறு சாதியினர்.

அதில், இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கல்லூரியில், அனுபவித்த சாதியக் கொடுமைகள், தனித்து செயல்பட்ட வலிகள் ஏராளம். அந்த இளம் வயதில், அவர் மனதில் ஏறியது பாடங்கள் மட்டுமல்ல; பிறப்பால் அனைவரும் சமம் என்று சமூகத்திற்கு கற்பிக்கவேண்டிய சிந்தனையும்தான். இதுவே இன்றைய நிலைமைக்கு வழிவகுத்ததென்று கூட சொல்லலாம். கல்வியே ஒடுக்கப்பட்டவர்களின் பேராயுதம் என்பதை உணர்ந்து தீண்டாமைச் சூழலிலும் வைராக்கியத்துடன் கல்லூரிப் படிப்பை முடித்தவர்.

உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! | Irattai Malai Srinivasan Birthday Article

நீலகிரியில் பிரிட்டிஷ் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்துகொண்டே பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடும் கலகராகவும், தான் கற்றக் கல்வியை பயன்படுத்தத் துவங்கினார். 1883-ஆம் ஆண்டு ஏழு மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என்று பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டம் பெரிய அளவில் பிரபலமாகாத அந்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வூட்டி பட்டியலின மக்களையே பள்ளிகளைத் துவக்கவைத்தார்.

பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சிறப்புப் பள்ளிகளை உருவாக்கவேண்டும் என்ற இவரது வேண்டுகோளை ஏற்று பிரிட்டிஷ் அரசும் சிறப்புப் பள்ளிகளை உருவாக்கியது. ஆனால், அப்படி பள்ளி துவங்க பல எதிர்ப்புகள் கிளம்பியது. நிலம் கொடுக்க முன்வராமை, பட்டியலின மக்கள் பள்ளிக்கு மாற்று சாதி ஆசிரியர்கள் வராதது போன்ற பிரச்னைகள் தொடந்து வந்தன.

உதயசூரியனை உதயமாக்கிய வீரர்! - இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! | Irattai Malai Srinivasan Birthday Article

ஆனால், கல்வி கற்க வெறும் கோரிக்கை மட்டும் வைக்காமல், அந்தக் கோரிக்கை செயல்படுத்தப்படும்போது ஏற்பட்ட இடர்பாடுகளுக்காகவும் களத்தில் நின்றவர் இரட்டை மலை சீனிவாசன். அவரால் உருவான சிறப்புப் பள்ளிகள்தான் பின்னாட்களில் உருமாறி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என்றானது.

சாகும் வரையிலும் சமூக சீர்திருத்தத்திற்காக போராடியதால் தான் இன்று, ஓரளவு மக்கள் சமூக சீர்திருத்தவாதியாகியுள்ளனர். என்று தமிழகம் சாதி, மத வேறுபாடின்றி திகழ்கிறதோ அன்றே அவரின் மறைவு முழு வெற்றியடைந்ததற்கு சமமாகும்..