கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 50 பேர் பலி
ஈராக்கில் கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் நசிர்யா என்ற நகரில் இயங்கி வரும் அல் உசேன் டீச்சிங் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் 70 படுக்கைகளுடன் கூடிய புதிய கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனிடையே அங்கு எதிர்பாராதவிதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. இதை எதிர்பாராத நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வார்டு முழுவதும் நெருப்பு பரவியதால் 50 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஏற்கனவே ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் நேரிட்ட தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.