விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு: ஈரான் அதிபரின் கதி? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உட்பட 9 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகப்டர் விபத்து
அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மலைப்பகுதி என்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.
அதிபரின் நிலை?
இந்நிலையில், தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. மேலும், ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களை துருக்கி ஆளில்லா விமானம் கண்டுபிடித்தது.
உடனடியாக அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உட்பட 9 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.