ஈரான் துறைமுகத்தில் பெரும் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு; 750 பேர் காயம்
ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் துறைமுக வெடி விபத்து
ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகம் எண்ணெய், சர்வதேச அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நேற்று(26.04.2025) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
இதில், 750க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 10 மணி நேரங்களுக்கு மேலாக தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள், இதுவரை 80% தீயை அணைத்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகை காற்றில் பரவியதால், பந்தர் அப்பாஸ் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்த ரசாயனங்களை, பராமரிப்பின்றி அலட்சியமாக கிடங்குகளில் வைத்திருந்ததுதான் இந்த வெடிவிபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதேவேளையில், வெடிவிபத்துக்கான காரணத்தை ஈரான் அரசு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்கா உடன் ஈரான் அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.