இங்கிலாந்து வீரர்களை கழட்டி விட ஐபிஎல் அணிகள் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் வீரர்களை ஏற்கனவே அரசியல் காரணங்களால் ஐபிஎல் அணிகள் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் செயல் பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது
15வது சீசனில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த 30 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வொக்ஸ், சாம் கரண், ஆர்சர் , ஜோ ரூட் போன்ற வீரர்கள் பங்கேற்கவில்லை. முதலில் இதற்கு காரணம் காயம் என்று தகவல் வெளியானது. ஆனால் இதன் காரணமே வேறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணியின் சாதாரண வீரர்களான ஜேம்ஸ் வீன்ஸ்,சாம் பில்லிங்ஸ், சாகிப் மகமுத் உள்ளிட்டோர் தங்களது விலையை அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கும், பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்காததற்கும் காரணமாக கூறப்படுகிறது.
அதேசமயம கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு வர வேண்டிய வருமானம் குறைந்துள்ளது. மேலும் நிறவெறி புகாரில் கிரிக்கெட் வாரியம் சிக்கியதால் அதற்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகையும் குறைக்கப்பட உள்ளது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது
அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது சம்பளத்தை 20 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பங்கை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நிதியாக தர வேண்டும் என்று வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களுக்கு வரியில் சலுகை வழங்கி தங்களுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் அணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஐபிஎல. அணிகள், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.