ஐபிஎல் கிரிக்கெட்: வில்லியம்சன் போராட்டம் வீண்..சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி அணி

ipl victory srh dc superover
By Praveen Apr 25, 2021 06:46 PM GMT
Report

டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். ஷிகர் தவான் 28 ரன்கள் அடித்தார். பிரித்வி ஷா அரைசதம் அடித்து 53 ரன்னில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஹெட்மையர் 1 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

வார்னர் 7 ரன், பேர்ஸ்டோவ் 38 ரன், விராட் சிங் 4 ரன், கேதார் ஜாதவ் 9 ரன், அபிஷேக் வர்மா 5 ரன், ரஷீத் கான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று அரை சதமடித்தார். அவருடன் விஜய் சங்கர் இணைந்தார்.

கடைசி 2 ஓவரில் வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் விஜய சங்கர் அவுட்டாக, 16 ரன்கள் கிடைத்தது. இறுதியில், ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனானது. இதைத் தொடர்ந்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐதராபாத் அணி முதலில் ஆடியது. வார்னரும், கேன் வில்லியம்சனும் இறங்கினர். அக்சர் படேல் பந்து வீசினார். ஒரு ஓவரில் அந்த அணி 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 6 பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. இது டெல்லி அணி பெற்ற 4வது வெற்றி. ஐதராபாத் அணி பெற்ற 4வது தோல்வி இதுவாகும்.