முதல் முறையாக போட்டி சம்பளம் - ஐபிஎல் அறிவித்த 8 புதிய விதிகள் என்ன?
ஐபிஎல் ஏலம் தொடர்பாக புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல்
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 17 தொடர்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு 18 வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
இதற்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில், எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடு, வீரர்களுக்கு போட்டி சம்பளம் என்பது குறித்த விதிகளை ஐபிஎல் ஆட்சிமன்ற குழு அறிவித்துள்ளது.
புதிய விதிகள்
1.) இதன்படி, ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏலத்திற்கு முன்பாக வீரர்களை நேரடியாக தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி தங்கள் அணிக்கு வாங்கிக் கொள்ளலாம்.
2.) ஒரு அணி 6 வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைப்பது, எத்தனை வீரர்களை ஆர்டிஎம் அட்டையை பயன்படுத்தி வாங்குவது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஆறு வீரர்களில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் வீரர்கள் இடம் பெறலாம். இதில் 5 சர்வதேச வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை.
3.) ஏலத்தில் செலவு செய்வதற்கான தொகை முன்பு 100 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அந்த தொகை 120 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏலத்தில் செலவிட வேண்டிய தொகையுடன் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கான தொகை மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 2025 ஐபிஎல் தொடரில் 146 கோடி வரை ஒரு அணி செலவு செய்யலாம். இந்த தொகை 2026 இல் 151 கோடி ரூபாயாகவும், 2027 இல் 157 கோடி ரூபாயாகவும் இருக்கும்.
போட்டி சம்பளம்
4.) ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஆடும் வீரருக்கு 7.5 லட்சம் சம்பளமாக அளிக்கப்படும். இம்பாக்ட் வீரருக்கும் சேர்த்து இது பொருந்தும். போட்டி சம்பளத்தோடு சேர்த்து தங்கள் அணி வீரர்களுக்கு ஒப்பந்தத்தின்படி அளிக்கும் சம்பளமும் வழங்கப்படும்.
5.) எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் மெகா ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்து நடைபெறும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியும். மெகா ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த 2 ஐபிஎல் தொடர்களுக்கு முன் நடக்கும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியாது.
உள்ளூர் வீரர்
6.) ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்ட வீரர், ஐபிஎல் தொடர் துவங்கும் முன் தொடரில் இருந்து விலகினால் அந்த வீரர் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற முடியாது. மேலும் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் ஆடுவதற்கும் தடை செய்யப்படுவார்.
7.) சர்வதேச போட்டிகளில் ஆடிய இந்திய வீரர், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலோ, பிசிசிஐயின் ஒப்பந்தத்தை பெற்றிருக்கவில்லை என்றாலோ அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார்.
8.) 2025 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொடர்களுக்கு இம்பாக்ட் வீரர் விதி பொருந்தும்.