ஐபிஎல் கிரிக்கெட்:7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை

mumbai win ipl rr
By Praveen Apr 29, 2021 02:18 PM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனில் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் டி காக் இந்த முறை நல்ல தொடக்கத்தைத் தந்தார். ரோஹித் மெதுவாக ரன் குவிக்க டி காக் துரிதமாக ரன் சேர்த்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு பவர் பிளேவின் கடைசி பந்தில் கிறிஸ் மோரிஸிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து, டி காக்குடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். சூர்யகுமார் வந்த வேகத்தில் பவுண்டரிகளாக அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால், ரன் ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது.

பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய தருணத்தில் மாரிஸைக் கொண்டு வந்தார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன். அதற்குப் பலனாக சூர்யகுமார் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பார்த்திராத வகையில் கிருனாள் பாண்டியா களமிறக்கப்பட்டார். அவர் ஒத்துழைக்க டி காக் 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு பாண்டியாவும் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார்.

கடைசி 4 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முஸ்தபிஸூர் ரஹ்மான் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்த பாண்டியா அதே ஓவரில் 39 ரன்களுக்கு போல்டும் ஆனார். கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. 18-வது ஓவரை மோரிஸ் வீசினார்.

கைரன் பொல்லார்ட் எதிர்கொண்டார். முதல் பந்தில் சிக்ஸர், 2-வது பந்தில் பவுண்டரி, 3-வது பந்து ஹெல்மட்டில் பட்டு பவுண்டரி போக மும்பையின் வெற்றி எளிதானது. கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 19-வது ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் டி காக். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பொல்லார்ட் மும்பை வெற்றியை உறுதி செய்தார்.

18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி காக் 70 ரன்களும், பொல்லார்ட் 16 ரன்களும் எடுத்தனர்.