ஐபிஎல் கிரிக்கெட்: படிக்கல்,கோலி அசத்தல்..10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்

win ipl kholi padikkal
By Praveen Apr 22, 2021 06:14 PM GMT
Report

ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர்.

ஆனால் இவர்கள் வந்த வேகத்தில் பட்லர் 8, மனன் வோரா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறங்கிய டேவிட் மில்லர் ரன் எடுக்காமல் நடையை காட்டினார். அடுத்து சஞ்சு சாம்சன், சிவம் துபே இருவரும் மட்டுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.

சஞ்சு சாம்சன் 21 ரன்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடித்து மேக்ஸ்வெலிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த சிவம் துபே அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார்.

கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா , கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. விக்கெட் எதுவும் இழக்காமல் ஆடிய பெங்களூரு அணி 16.3 ஓவரில் 181 ரன்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப் பெற்றது. கேப்டன் கோலி 72 ரன்களுடனும் படிக்கல் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு தொடர்ச்சியான 4வது வெற்றிக் கிடைத்துள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணி சந்தித்த 3வது தோல்வியாகும்.