வீரர்களுக்கு பரவும் கொரோனா - ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தமா?
ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தாண்டும் பாதியிலேயே தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ-பபுள் வளையத்தில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா உறுதியானது. இதற்கு மறுநாள் அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த அணியைச் சார்ந்தவர்களுக்கு பிசிஆர் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ், சமூக வலைத்தளக் குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணிகளுக்குள் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும், ஐபிஎல் தொடரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணத்தை பெரிதாக கருதி ரத்து செய்யாமல் இருந்தால் பல முன்னணி வீரர்களும் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருக்கும் ரசிகர்களும், வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக பிசிசிஐ சார்பில் அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.