என்ன ஆனாலும் சரி தல -ய மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் : CSK நிர்வாகம் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வீரராக தோனியைத் தக்கவைப்போம் என்று சி.எஸ்.கே நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் முதல் சுற்றும், ஐக்கிய அரசு அமீரகத்தில் இரண்டாவது சுற்றுமாக ஐ.பி.எல் 2021 தொடர் நடைபெற்று முடிந்தது. கடந்த சீசனில் லீக் ஆட்டங்களில் படுதோல்வியடைந்து முதல் ஆளாக வெளியேறிய தோனி தலைமையிலான சென்னை அணி இந்த முறை மிகச் சிறப்பாக விளையாடியது.

இந்தமுறை தோனி தலைமையிலான சென்னை தொடர் வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை மிக எளிதாக வீழ்த்தி கோப்பை வென்றது.

இதன் மூலம் சென்னை அணி தோனி தலைமையில் நான்காவதுமுறையாக கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகிய நிலையில் ஐ.பி.எல் தொடரிலிருந்து எப்போது விலகுகிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஐ.பி.எல் தொடரின்போதே இதுதான் உங்களது இறுதிப் போட்டியா என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் கண்டிப்பாக இல்லை என்று பதில் கூறி ரசிகர்களை உற்சாகமடையவைத்தார்

மேலும்,  தற்போதைய ஐபிஎல் வெற்றியின் போதும் , அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிக்கு சிறப்பாகப் பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும்.

எவ்வளவு வீரர்களை தக்கவைக்கலாம் என்ற அனுமதியை மீறி நான் டாப் 3-4 வீரர்களில் இருக்கிறேனா என்பது முக்கியமல்ல, அணி பாதிக்காதவாறு வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் இன்னமும் அணியிலிருந்து விலகவில்லை’ என்று பதில் கூறியிருந்தார் தோனி.

 அவர் சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அவர்களது பதிலில் :

ஏலத்தில் வீரர்களை தக்கவைக்கும் வழிமுறை இருக்கும். எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்பது குறித்து எங்களுக்கு இதுவரையில் தெரியாது.

ஆனால், அது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான். நாங்கள் தக்க வைக்கும் முதல் நபர் எம்.எஸ்.தோனிதான். ஒரு கப்பலுக்கு கேப்டன் முக்கியம். அவர், கட்டாயம் அடுத்தாண்டு விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்