ஐபிஎல் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது டெல்லி

fans win kkr ipl dc
By Praveen Apr 29, 2021 06:04 PM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ரானா டெல்லி வீரர் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ராகுல் திரிபாதி 19 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மோர்கன் (0) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சுனில் நரைனும் (0) ரன் எதுவும் எடுக்காமல் லலித் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஆண்ரே ரசல், துவக்க வீரர் சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

38 பந்துகளை சந்தித்த சுக்மன் கில் 43 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய ஆண்ரே ரசல் டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். 27 பந்துகளை சந்தித்த ரசல் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் அக்சர் பட்டேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இரு வீரர்களுமே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஷிகர் தவான் சற்று நிதானமாக ஆடிய போதும் மறுமுனையில் பிரித்வி ஷா ருத்ர தாண்டவம் ஆடினார். பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 46 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த கேப்டன் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரிஷப் பண்ட்டும் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா அணி தரப்பில் அந்த அணியின் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் டெல்லி கேப்பிட்டல் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5-வது இடத்தில் உள்ளது.