ஐபிஎல் கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்

win kkr match ipl rr
By Praveen Apr 24, 2021 10:10 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை சாய்த்தது. பிறகு நடந்த ஆட்டங்களில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடமும், 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

பெங்களூருவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 43 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி ஷிவம் துபே (46 ரன்), ரியான் பராக் (25 ரன்), ராகுல் திவேதியா (40 ரன்) ஆகியோரின் அதிரடியில் 177 ரன்கள் சேர்த்தது. ஆனால் ராஜஸ்தான் பந்து வீச்சு எடுபடவில்லை. 6 பவுலர்களை பயன்படுத்தியும், பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட்கோலி, தேவ்தத் படிக்கல்லை கடைசி வரை அசைக்க முடியவில்லை.

இந்த மோசமான தோல்வியை ராஜஸ்தான் அணி மறந்து அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியமானதாகும். 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. அதனை அடுத்து நடந்த ஆட்டங்களில் 10 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சிடமும், 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடமும், 18 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டது.

சென்னைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 221 ரன் இலக்கை நோக்கி ஆடுகையில் கொல்கத்தா அணி 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தாலும், தினேஷ் கார்த்திக் (40 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (54 ரன்), கம்மின்ஸ் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 202 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அடங்கியது. கொல்கத்தா அணி எழுச்சி பெற அந்த அணியின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.

அத்துடன் அந்த அணியின் பந்து வீச்சும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். தலா ஒரு வெற்றியை ருசித்துள்ள இந்த இரு அணிகளும் 2-வது வெற்றியை தன்வசப்படுத்த கடுமையாக போராடும். அத்துடன் இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.