ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் வந்ததால் கொரோனா பாதிப்பா? பிசிசிஐ கூறிய பதில் என்ன?

bcci ipl2021 T Natarajan
By Irumporai Sep 23, 2021 11:11 AM GMT
Report

 ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா உறுதியானதால் தற்போது அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சன்ரைசர்ஸ் - தில்லி ஆட்டம் தொடங்கும் முன்பு நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் - டெல்லி ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடராஜனுக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. தீவிரமான கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் உள்ளார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வீரர்களிடம் கூறியுள்ளோம்.

இனிமேலும் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டி பாதிக்கப்படாது என நம்புகிறோம். தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலையளித்தாலும் பீதியடையத் தேவையில்லை. எல்லாமே நன்றாக நடக்கும் என நம்புவோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து முழு ஆதரவு கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவர்களும் கவனித்து வருகிறார்கள். மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதித்ததால் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

நேற்று தான் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை விளையாடியது. அதற்கு முன்பே நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணியும் தற்போது பாதுகாப்பு வளையத்தில் தான் உள்ளது எனக் கூறியுள்ளது.