ஐபி எல் ஏலத்தில் குளறுபடி : வீரரை மாற்றி விற்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு
ஐபிஎல் மெகா ஏலத்தில், சாரு சர்மா செய்த மிகப்பெரும் தவறால், பெரும் இழப்பில் இருந்து மும்பை அணி தப்பியதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம் கடந்த பிப்.12 மற்றும் 13ம் தேதிகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஏலத்தின் போது சாரு சர்மா தவறு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஆனால் நியாயப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தான் அவரை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், கலீல் அகமது ஏலம் விடப்பட்ட போது மும்பை மற்றும் டெல்லி அணிகள் போட்டிப்போட்டன. இதனால் ரூ.50 லட்சம் அடிப்படை தொகையில் இருந்து ரூ. 5 கோடி வரை ஏலம் சென்றது.
டெல்லி அணி கடைசியாக ரூ.5 கோடி கேட்டுவிட்ட சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5.25 கோடி தருவதாக ஏலம் கேட்டது. அப்போது இதனை அதிகரிக்க விரும்புகிறீர்களா என டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தியிடம் சாரு சர்மா கேட்டார்.
அதற்கு அவர் முதலில் தனது பலகையை தூக்கிவிட்டு, பின்னர் வேண்டாம் என மறுத்துவிட்டார். இதனால் மும்பை அணி கேட்ட ரூ.5.25 கோடிக்கே கலீல் அகமது விற்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் டெல்லி அணி தான் ரூ.5.25 கோடிக்கு கேட்டிருப்பதாக குழம்பிய சாரு சர்மா, மும்பை இந்தியன்ஸிடம் தொகையை ( ரூ.5.50க்கு) அதிகரிக்கிறீர்களா என்று கேட்டார். ஆனால் பதற்றத்தில் தான் கேட்டிருந்த தொகையையே மறந்த மும்பை அணி நிர்வாகிகள் மேலும் பணத்தை செலவழிக்க மறுத்துவிட்டனர்.
— Addicric (@addicric) February 14, 2022
டெல்லி அணியும் பணம் மீதமாகிறது என்ற ஆசையில் அமைதியாகவே இருந்துவிட்டது. இதனால் மும்பை அணிக்கு ரூ.5.25 கோடிக்கு விற்கப்பட்டிருக்க வேண்டிய கலீல் அகமது, அதே தொகைக்கு டெல்லி அணிக்கு சென்றார்.
இதனையடுத்து சாரு சர்மா தவறு செய்துவிட்டதாகவும், கலீல் அகமதை மும்பை அணியிடமே திருப்பிக்கொடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.