ஐபிஎல் ஏலத்தில் பணத்தை வீணாக்க முயன்ற அணிகள் : கடைசி நேரத்தில் காப்பற்றிய சக அணிகள்
ஐபிஎல் ஏலத்தில் 10 அணிகளும் வீரர்களை தேர்வு செய்வதில் மற்ற அணிகளுக்கு கைக்கொடுத்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது.
முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில்எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இளம் வீரர்களுக்காக போட்டி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு ஏலம், சீனியர் வீரர்கள் விலை போகாதது என தரமான காட்சிகள் அரங்கேறின.
அந்த வகையில் சில வீரர்களை சம்பந்தமே இல்லாமல் விலையை ஏற்றி அணிகள் அழகு பார்க்க கோடிகளை கொட்டி தங்களது வாய்ப்பை சில அணிகள் வீணாக்கின. அதேபோல் சில அணிகள் பணத்தை வீணாக்குவதை சக அணிகள் காப்பாற்றின.
அதன்படி ஆல்ரவுண்டரான ராகுல் திவாட்டியாவை கடும் போட்டிக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. முன்னதாக வெறும் 40 லட்சம் ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்த இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கடுமையாக முயற்சித்த நிலையில் கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
2 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தை எதிர்கொண்ட அம்பத்தி ராயூடுவை எடுக்க ஹைதராபாத் அணி முயற்சிக்க உள்ளே வந்த சென்னை அணி அவரை 6.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதேபோல் ஆல் ரவுண்டரும், ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ரூணல் பாண்டியாவுக்கு சென்னை உள்பட சில அணிகள் போராடின.
கடைசியில் லக்னோ அணி அவரை 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மேலும் 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் இந்த சீசனில் ரூ.7 கோடிக்கு மட்டுமே ஏலத்தில் விடப்பட்டார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தீபக் சாஹருக்கு சென்னை, ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டன.
கடைசியில் சென்னை அணி ரூ.14 கோடி கொடுத்து அவரை ஏலத்தில் வாங்கியது. வெறும் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயம் செய்திருந்த தீபக் சாஹருக்கு இது நிச்சயம் அதிர்ஷ்டம் தான்.
2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூருக்கு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோத கடைசியில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி தட்டி தூக்கியது.