ஐபிஎல் போட்டியில் சச்சின் மகன் அறிமுகம்; குவியும் வாழ்த்து - தந்தை பெருமிதம்
ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ள சச்சினின் மகனிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அர்ஜுன் டெண்டுல்கர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார். அவருக்கு தொப்பியை, ரோஹித் சர்மா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து அர்ஜூன் நன்றி தெரிவித்தார். இந்தப் போட்டியை சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் மைதானத்தில் கண்டுகளித்தனர். அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜுனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
தந்தை அறிவுரை
தொடர்ந்து, தனது மகன் அர்ஜுனுக்கு தந்தை சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், அர்ஜுன் நீ கிரிக்கெட் வீரனாக இன்று உனது பயணத்தில் முக்கிய அடியை எடுத்து வைத்திருக்கிறாய். உன் தந்தையாக உன் மீது அதிக அன்பையும் அதேசமயம் கிரிக்கெட் மீது காதலும் கொண்டவனாக இதை சொல்கிறேன்.
நீ தொடர்ந்து கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுப்பாய் என்று எனக்குத் தெரியும். அப்படி செய்யும்போது கிரிக்கெட்டும் உன்னை மீண்டும் விரும்பும். இந்த கட்டத்திற்கு வர நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும்.
இன்னும் நீ கடுமையாக முயற்சி செய்வாய் என்றும் எனக்கு தெரியும். இது உன்னுடைய அழகான பயணத்தின் சிறப்பான தொடக்கம். நன்றாக விளையாடு எனத் தெரிவித்துள்ளார்.