என்ன சார் இதெல்லாம் , தப்பு பண்ணது சிஎஸ்கே , தண்டனை ஜடேஜாவுக்கா? : கொந்தளித்த விமர்சகர்கள்

Irumporai
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து, தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கும் முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார்.
அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமான நிலைக்கு சென்றது சென்னை அணி ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் கேப்டன் கேப்டன் பதவியானது மீண்டும் தோனி வசம் சென்றது.
இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஜடேஜா ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. இவரது காயம் பாதிதான் சரியாகியுள்ளதாகவும், இந்த காயத்தோடு அடுத்த போட்டியில் பங்கேற்றால், அது ஜடேஜாவுக்கு பெரிய பிரச்சினையாக மாறும் என சிஎஸ்கே மருத்துவர்கள் எச்சரித்ததால்தான் ஜடேஜா விலகியிருப்பதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஜடேஜா அணியைவிட்டு கிளம்புவதற்கு முன்பு, நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார். அப்போது கேப்டன் பதவி எனக்கு சரிபட்டு வராது. இதனால், ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இதனால், அடுத்த சீசனிற்கு புது கேப்டனை தயார்ப்படுத்துங்கள் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜடேஜா மீது அதிருப்தியில் இருந்த சிஎஸ்கே நிர்வாகம் ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவறு சிஎஸ்கே நிர்வாகத்தின் மீதுதான் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.மேலும் 15ஆவது சீசன் தொடங்கும் ஒருசில நாட்களுக்கு முன்பே கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது.
மெகா ஏலத்தில் நடைபெற்றபோது நிர்வாகம் தோனியின் ஆலோசனைப்படிதான் அணியை தேர்வு செய்தது. ஜடேஜா கேப்டன் பதவியில் இல்லாததால் ஆலோசனை செய்யப்படவில்லை.
ஜடேஜாவை முன்பே கேப்டனாக அறிவித்து, அவருக்கு தேவையான வீரர்களை வாங்கியிருந்தால், அது நிச்சயம் ஜடேஜாவுக்கு சாதகமான விஷயமாக இருந்திருக்கும்.
இப்படி தவறை நிர்வாகம் வைத்துக்கொண்டு, ஜடேஜா மீது முழு பழியை போடுவது சற்றும் நியாயமானது கிடையாது என கூறுகின்றனர் விளையாட்டுத்துறை விமர்சகர்கள்.